தலவரலாறு

வட்டுக்கோட்டையூர் வன்னியன்தோட்டம்

அருள்மிகு சின்னக் கதிர்காமம்

தலவரலாறு

 

முருகன் திருப்பதிகளுள் சின்னகதிர்காமம்

 

கந்தவேள் கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் அவன் தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் மற்றும் பல்வேறு பழம் பதிகளிலும் அமர்ந்தருளி அடியார்களுக்கு அருளார் அமுதை வாரிவழங்கி வருகின்றான். ஈழத்திற் பல்வேறு முருகன் திருத்தலங்கள் உளவேனும் பழமை சிறப்பினாலும் திருவருட் பொலிவினாலும் கதிர்காமக்கந்தன், மாவைக்கந்தன், நல்லைக்கந்தன், சந்நிதிமுருகன் ஆலயங்கள் சிறந்து விளங்குகின்றன. அவ் வகையில்  வட்டுக்கோட்டை மேற்கில் வன்னியன் தோட்டத்தில் அமைத்திருக்கும் சின்னக்கதிர்காமமும் சிறப்புப் பெற்று விளங்குகின்றது.

 சைவப்பெரியார் சின்னட்டியரும் வேல்வழிபாடும்

 வாடாச்சிறப்பின் வட்டூரில் வழமை சான்ற தொல்குடியின் கண்ணே ஆசார அநுட்டான சீலர் சின்னட்டியார் அண்ணளவாக  200  ஆண்டுகளுக்கு முன் தோன்றினார். இவர் குருலிங்க சங்கம வழிபாட்டில் சிறந்து விளங்கினார். ஆண்டுதோறும் அறுபத்து மூவர் குருபூசை இயற்றி இறுதியில் மகேஸ்வரர் பூசையும் செய்வார். ஆதலின் “நமது சக்தி ஆறுமுகன் அவனும் யானும் பேதமின்றால் நம்போற் பிரிவிலன் யாண்டும் நின்றான் ஏதமில் குழவி போல்வான்” என்னும் சிவபிரானின் திருக்கூற்றின் படி செவ்வேட் பெருமானைச் சிந்தையிலிருத்தி வழிபட்ட இவர் தமது இல்லத்தில் வேல் ஒன்றையும் வைத்து வழிபாடு இயற்றி வந்தார்.

 நாம மந்திர மகிமை

ஒரு காலத்தில் தமிழர் என்ற சொல் சைவ சமயத்தினரை மட்டும் உணர்த்தி நின்றது.  ஆதலினால் அவர்கள் தங்கள் குழந்தைச் செல்வங்களுக்கு இறைவன் திருநாமங்களை வைத்து எப்பொதும் திருநாம மந்திரத்தை ஓதி மகிழ்தனர். இன்று அந்தநிலை மறைந்து விட்டது. செம்மல் சின்னட்டியரோவெனின் தமது வழியினருக்கு முருகன் திருநாமங்களை சூட்டி இன்புற்றார். எடுத்துகாட்டாக செல்லையா, குழந்தைவேலர், குமரேசர், வெற்றிவேலர் முதலியவர்களின் பெயர்களை குறிப்பிடலாம்.

 வெற்றிவேலரின் திருத்தந்தையார்

சைவப்பெரியார்  சின்னட்டியருக்கு மக்கள் பலர் இருந்தனர். முருகுப்பிள்ளையார்,  நாகப்பர், விநாயகர், வேலுப்பிள்ளை, என்போர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களுள் முருகுப்பிள்ளை என்பவர் சிறந்த இடத்தை வகிக்கிறார். உள்ளன்பு உடையவரே இறைவனை காணுவர் என்ற உயர்ந்த நோக்கத்தைக் கொண்டவர் சித்தர் பாடல்களில் சிறந்த பயிற்சி உடையவர். வந்தோரை வரவேற்கும் மாண்பினர்.

 

“கோயிலாவ தேதடா குளங்களாவ தேதடா

கோயிலு குளங்களு கும்பிடு குலாமரே

கோயிலு மனத்துளே குளங்களும் மனத்துளே

அவது மழிவது மில்லையில்லை யில்லையே”

 என்னுந் திருப்பாடலை அடிக்கடி படிகாட்டுவார். தனது தந்தையார் பூசித்து வந்த ஞானவேலினை உள முருகித் தொழுவதை வழக்காறாகக் கொண்டவர் இவருக்கு முன் நாம் குறிப்பிட்ட நான்கு திருக்குமாரர்களுடன் நன்னிப்பிள்ளை, சிவக்கொழுந்து, அமராவதி முதலிய மகளிர் மூவரும் இருந்தனர். இந்த சூழ்நிலையிலே தான் நாம் வெற்றிவேலரைக் காண்கின்றோம்.

வெற்றிவேலரின் இளமைக்காலம்

Untitled-4 copy 2

ஆரம்பக்கல்வியை முடித்துக்கொண்டு ஆங்கிலங் கற்பதற்காக மானிப்பாயிற் சிறந்து விளங்கிய கிறீன் நினைவுக் கல்லூரியிற் சேர்ந்தார். எதிர்பாராத நிகழ்வுகளால் கல்வியைக் கைவிட வேண்டிவந்தது. இளைஞரான வெற்றிவேலர் முந்தைநற் தவத்தினாலே முருகனைப் பக்தி பண்ணி முந்தையோர் வழிபட்டுவந்த ஞானவேலினை சிறுகுடில் அமைத்து எழுந்த்தருளச் செய்து வழிபாடு இயற்றி வந்தார். தந்தையார் புதல்வர் செயலைக்கண்டு கந்தவேள் கருணையை ஒருபுறம் வியந்தார், மறுபுறம் கல்வியில் ஆர்வங் குன்றிவிடுமோ என்று கவலையுங் கொண்டார். மகனாரைத் தண்டிக்கவுஞ் செய்தார் திருவருட் குறிப்பை யார் அறிவர்.

பழநியப்பரும் பாதயாத்திரையும்

 பண்டைநாளிலே பக்தர்கள் கருணைபொழியும் கந்தவேளை தரிசித்து வணங்க கதிர்காமத்திற்கு பாதயாத்திரை செல்வது வழக்கம். அது கிடைத்தற்கரிய பெரும்பேறு என்று கருதினர். நடக்கும் போதெல்லாம் “ அரோகரா க்ககோஷமிட்டு அப்பனை நினைவார்கள். மேலும் இஷ்டசித்திகள் கைகூடுவதற்காக தாம் வைத்த நேர்த்திக்கடனை நிறைவேற்றி தாம் விரும்பிய பேறனைத்தையும் பெற்று மகிழ்வது வழக்கம் இவ் வகையில் வட்டுகோட்டை மேற்கில் வசித்து வந்த ஆங்கிலம் செந்தமிழ் கற்றுணர்ந்து அரச பணியாற்றிய சிந்தனை செல்வராகியன் சீனியர் பழநியப்பர் குடும்பசகிதம் கதிர்காமயாத்திரையை மேற்கொண்டு தாம் விரும்பிய பேற்றினை பெறுவதற்காக நினைந்து செயற்பட்டார்.

திருவருட்குறிப்பால் தமது மைத்துன கோத்திரத்தினரான பதினாறு வயதடைந்த வெற்றிவேலரையும் தம்மோடு கூடவரும்படி அழைத்தார்.

யாத்திரை மாதக்கணக்கில் பல்வேறு இடையூறுகளையும் சந்தித்து இறுதியில் கதிர்காமம் சென்று நிறைவடைந்தது.

வெற்றிவேலருக்குத தங்கவேல் கிடைத்தல்

1915ம் ஆண்டு  திர்த்தோற்சவத்தின் போது பழநியப்பர் அவர்கள் தாம் கொண்டு சென்ற வேலினை கோயில் அர்ச்சகராகிய “கப்புறாளை” யிடம் பழம், பாக்கு, வெற்றிலை மற்றும் பூசனைத்திரவியங்களுடன்

கொடுத்தார். அர்ச்சனை நடைபெற்றது. கற்பூரசோதியின் நடுவில் “கப்புறாளை” விபூதி பிரசாதம் வழங்கினார். இருப்பிடம் செல்ல   மூவரும் புறப்பட்டனர். என்ன அதிசயம் “கப்புறாளை”யார் ஓடோடி வந்து பழநியப்பரிடம் ஐயே! உங்களுடன் வந்த இளைஞன் எங்கே அவரை அழையுங்கள் என்றார். பழநியப்பர் வெற்றிவேலரைக் கப்புறாளையார் முன் நிறுத்தினார். சிறிது நில்லுங்கள் என்று கூறி விட்டு கருவறையுட் புகுந்து தங்கவேல் ஒன்றை எடுத்து வந்து வெற்றிவேலரைச் சிரசில் விபூதியிட்டு அசிர்வதித்து, இது நீர் விரும்பியதெல்லாம் தரும் என்று சொல்லிக் கையிலே தந்தார். வெற்றிவேலர் அப்போது ஆனந்த கண்ணிர் சிந்திநின்று வேலை வணக்குவதே எமக்கு வேலை  என்று திடசங்கற்பம் பூண்டார். கதிர்காமயாத்திரை நிறைவடைந்து வட்டுகோட்டைக்கு வந்து மாகேசுவரபூசை இயற்றினார். வெற்றிவேலர் தந்தையாருக்கு அஞ்சி உடன் பிறந்தாள் நன்னிப்பிள்ளையின் இல்லத்தில் சிறுகுடில் அமைத்து தங்கவேலைத் தாபித்து வழிபாடு இயற்றிவந்தார்.

கதிர்காம வாசமும் அனுபூதிமான்கள் தொடர்பும்

 கதிர்காமவாசம் வெற்றிவேலருக்கு முருகன் மெய்யடியார் பலரின் தொடர்பு கிடைக்க வழிசெய்தது. அருளரசி சடையம்மா மற்றும் குருநாதக்குருக்கள் முதலியோரின் தொடர்பைச் சிறப்பாகக் குறிப்பிடவேண்டும். சடையம்மா அவர்கள் நல்லூர், கீரிமலை, தென்ன கத்துத் திருச்செந்தூர் முதலிய திருப்பதிகளில் மடம் அமைத்து திருத்தொண்டு புரிதலை வழ்க்காறாகக் கொண்டவர். அன்னையின் தொடர்பு வெற்றிவேலருக்குத் திருச்செந்தூர் சென்று செந்திலாண்டவனைச் சேவிக்கும் வாய்ப்பினை தந்தது. மேலும் சங்கீத கதாப் பிரசங்கியார் சங்கர சுப்பையர் தொடர்பும் கிடைத்தது. தெள்ளுதிரை கொழிக்கும்  திருச்செந்தூரில் சிலகாலம் வாழ்ந்துவிட்டு வெற்றிவேலர் வட்டூர் திரும்பினார். திரும்பியதும் இங்கு இளைஞராகிய இவருக்கு முருகனடியார் பலரின் தொடர்பும் பெருகிற்று.

 தங்கவேல் பிரதிட்டையும் குமரேசரும்

காலம் உருண்டோடியது 1921ஆம் ஆண்டில் வெற்றிவேலரின் அண்ணன் குமரேசர் நல்வினை தூண்ட தம்  இனபந்துகளுடன் கலந்து ஆலோசித்துத் தங்கள் தந்தையின் வன்னியன் தோட்ட முதுசொக்கணிச் சொரியல் நிலத்தில் தமது வீடு இருந்த பகுதியில் தங்கவேலை எழுந்தருளி வித்துப் பூசை வழிபாடுகள் இயற்ற வகை செய்தார். வெற்றிவேலர் அர்ச்சகராக இருந்து நாள்வழிபாடு சிறப்பு வழிபாடுகளை நடாத்தி வந்தார். கதிர்காம வழிபாட்டின் பாங்கில் வாய்கட்டிப் பூசை செய்து வந்தார். வெற்றிவேலரின் சிறிய தந்தையாகிய நாகப்பரின் மகன் வல்லிபுரம் என்று அழைக்கப்படும் தம்பு என்பவரும் உதவியாக இருந்து பணிபுரிந்துவந்தனர். கந்தவேள் இங்கு அமர்ந்து அருளாட்சி புரிந்து வருகின்றார். அவரை நாடிவரும் அடியவர்கள் இஸ்ட சித்திகள் பெற்று இன்புறுகின்றனர். எண்ணற்ற நோயாளிகள் குணமடைந்து வருகின்றனர். ஆண்டுதோறும் கந்தபுராணபடனம் இனிதுற நடந்து வருகிறது. கந்தசஷ்டி இறுதி மகேஸ்வரபூசை முதலியன தவறாது நடைபெற்று வருவதனைக் குறிப்பிடாமல் இருக்கமுடியவில்லை. முருகன் ஆலயம் பல்வேறு வழிகளில் முன்னேற்றம் கண்டுள்ளது.

 சின்னக்கதிர்காமத்தின் சீரிய வளர்ச்சி

1931 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 16அந் திகதி சின்னட்டியார் முருகுப்பிள்ளை தனது ஆதனத்தை பங்கீடு செய்து வெற்றிவேலருக்குரிய பகுதியை உறுதி சாசனம் செய்து வழங்கினார். இதுவரை காலமும் குமரேசர் பாகத்தில் இருந்து அருச்சிக்கப்பட்ட தங்க வேலினை தமது பாகத்தில்  பிரதிட்டை செய்வதற்கு விரும்பினார். சிறிய கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டது. அங்கு தங்கவேல் பிரதிட்டை செய்யப்பட்டது. உறவினர்களும் மெய்யடியார்களும் ஊர்மக்களும் பிறரும் பங்குபற்றினர் அன்று திருக்கோயிலுக்கு வன்னியன் தோட்டம் சின்னக்கதிர்காமம் என நாமஞ் சூட்டப்பட்டது.

 சித்தர் – எந்திரப்பேழை வழங்குதல்

நாளாக நாளாக வெற்றிவேலருக்கு அக்காலத்தில் வாழ்ந்து கொண்டு இருந்த குஞ்சுப்புரி நவநாதசித்தர் கும்புறுப்பிட்டி சுவாமி, சித்தாண்டி ஆனைகுட்டிசுவாமி, பழனிமலை மனோன்மணிச்சுவாமி முதலியோரின் தொடர்பு கிடைத்தது, அவர்களுடன் நெருங்கிப் பழகினார், குஞ்சுப்புரி நவநாதசித்தர் மகத்துவம் வாய்ந்த எந்திரப்பேழை ஒன்றைத் தந்து கருவறையின் அடித்தளத்தில் அமைக்கப்பெற்ற நிலவறையில் வைத்துப் பூசிக்கும்படி கூறி ஆசீர்வதித்து அருளினார்.

மேலும் யாழ்ப்பாணத்து வண்ணார்பண்ணையில் வசித்து வந்த சீனிவாசகம் என்னும் பெரியார் தமிழ் நாட்டிலிருந்து தருவிதத சிவலிங்கத்தையும், மனோன்மணித் திருப்படிவத்தையும் சின்னக்கதிர்காமத்தில் பழனிமலை மனோன்மணிச்சுவாமி அவர்கள் தாபித்தருளினர்.

 பிடியரிசித் தொண்டு

 முருகபக்தியில் முதிர்ச்சியடைந்த வெற்றிவேலர்  ஆலய வளர்ச்சி கண்டு அகமகிழ்ந்தார். தமது ஞாதிகளாகிய வேலுப்பிள்ளை சின்னையா, வேலுப்பிள்ளை முத்தையா மற்றும் நாகப்பர் மணிக்கம்,  நாகப்பர் தம்பு இவர்களோடு முருகுப்பிள்ளை குமரேசரும் இணைந்து பிடியரிசித் தொண்டு செய்து சின்னக்கதிர்காமத்தில் பிரதி வெள்ளிக்கிழமைதோறும் சிறப்புற அன்னதானம் செய்து மகிழ்ச்சியுற்றனர்.

 விபரீதமான விளைவு

நாள்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாகிக் காலம் ஓடிக் கொண்டிருந்தது. வெற்றிவேலரின் இரத்த உறவினர் பலர் திடீர் திடீரெனக் நோய்வாய்ப்பட்டு “அவச்சா” எய்தினர். ஏதோ எங்கள் தவறுகளால் வேற்பெருமான் எங்களை அறுத்து ஒழிக்கிறானோ என்று உறவினர் கலக்கங்கொண்டனர்  செய்வது அறியாது திகைத்து நின்றனர். ஆறுமுகனின் அருளாடலை ஆர்தாம் அறிவர். கருவறையுள் சென்று பார்த்தபோது எந்திரப்பேழையினுள் சிறுவெடிப்போன்று தென்பட்டது. ஓடோடிச் சென்று தபதிமார்களை அணுகினர். அதற்குரிய ஆக்கப்பணியினை முற்றுவித்தனர்

கந்தையா உபாத்தியாயரும் தலயாத்திரையும்

1 copy 5

 கந்தையா உபாத்தியாயர் வெற்றிவேலரின் சிறிய தந்தையாரின் மூத்த புதல்வர். கந்தனைக் கருத்திலிருத்தி வழிபட்டு வந்தவர். “மூர்த்தி, தலம், தீர்த்தம் முறையால் தொடங்கினர்கோர் வார்த்தை சொல்சற்குருவும் வாய்க்கும் பராபரமே” என்னும் தாயுமானவர் வாக்கைத் தாரகமந்திரமாகக் கொண்டவர் 1945இல் தலயாத்திரையை மேற்கொண்ட போது அன்புப்பழம் நீ என்று அம்மை, முருகனை அழைத்த பழநிப்பதியையடைந்தார். அவர் வழிபாடு இயற்றி நிறைவு செய்துவிட்டு பழநிமலை அடிவாரத்தில் சிறிதுநேரம் தாமதித்திருந்தார். அங்கு தவக்கோலம் பூண்ட ஒரு மகானைச் சந்திக்க நேர்ந்தது. அவர் உபாத்தியாரைப் பார்த்து “முருகன் தாம் வட்டுகோட்டை சின்னக்கதிர்காமத்தில் பூதமனையில் இருப்பதாகவும் தம்மை தேவமனையில் வைத்து வழிபடும் படியும் குறிப்பிட்டான்” என்று சூசகமாக சொல்லியருளினார். உபாத்தியாயர் யான் இட்ட சித்தி கருதி யாத்திரையை மேற்கொண்டேன் சின்னக்கதிர்காமம் ஆலயத்தை மாற்றி அமைப்பது எனக்கு அரியசெயலகும். பூசணிக்காயை குருவி சுமக்க முடியுமா? என்று தாழ்மையுடன் கூறினார். அடியவர் தொடர்ந்தும் “ஆலயத்தை புதுக்கி அமைக்க உனனால் தான் முடியும் மறுமாற்றம் பொழியாதே விரைந்து பணியில் ஈடுபடு” என்று வற்புறுத்திக் கூறினார்உபாத்தியாயர் யாத்திரையை முடித்துக்கொண்டு ஊர்திரும்பினார்.

கந்தையா உபாத்தியாயரும்  சின்னக்கதிர்காமமும்

 சைவத்திருவாளர் சின்னட்டியரின் புதல்வர்களுள் ஒருவராகிய விநாயகரின் மூத்த திருமகன் கந்தையா உபாத்தியாயர் இவர் இளமையில் தமிழைக்கற்றுப் பெருமையுடன் வாழ்ந்தவர். மருத்துவம், சோதிடம் முதலிய கலைகளில் வல்லவர், குடிகுடியாக குமாரனிடத்தில் பக்தி கொண்டு ஒழுகியவர். சின்னக்கதிர்காமக் கட்டடத் திருப்பணியை மேற்கொண்டார். பணிக்குத்தாமே பணம் விட்டதன்றி உறவினர்களும்அன்போடு கொடுத்த சிறுதொகைப் பணத்தினையும் பெற்றுக்கொண்டார். நிதி வழங்கியவருள் ஆசிரியர் வி.நா.இரத்தினம், நா.தம்பு (வல்லிபுரம்), வெற்றிவேலர் முதலியவர்களும் குறிப்பிடப்பட வேண்டியவர்கள். நிற்க.மு.குழந்தைவேலு அவர்கள் விநாயகர் சிலாவிக்கிரகத்தையும், நா.சிவசம்பு அவர்கள் வயிரவ சூலத்தையும், ஆசிரியர்.வி.நா.இரத்தினம் அவர்கள் கண்டா மணியையும் வெள்ளியால் அமைந்த கைவேலையும், நா.தம்பு (வல்லிபுரம்)  அவர்கள் எந்திரப்பெட்டியை  வெள்ளி உலோகத்தினால் புதுக்கியும் உதவினார்கள். 1947ஆம் ஆண்டு சித்திரைத்  திருவோணநாளில் குடமுழுக்குவிழா இனிது நிறைவுற்றது. விழாக் கிரியைகளை அத்தியடிச்சாமி முன்னின்று நடத்தினார். ஊரார், அன்பர், உற்றார், உறவினர், அடியார் எல்லோரும் ஆதரவு நல்கிச் சிறப்பித்தனர். குடமுழுக்கு விழாவைத் தொடர்ந்து பத்தாண்டு காலமாக ஆசிரியர் கந்தையா அவர்கள் கோயிற் கருமங்களை முன்னின்று நடத்தி வந்தார். இவரது பங்களிப்பு பெரியார் வெற்றிவேலருக்குப் பெரிதும் உதவியாக இருந்தது. கந்தசஷ்டி விழா மகோற்சவம் முதலியன குறிப்பிடத்தக்கன.

 பெரியார் வெற்றிவேலரும் அணுகத்தொண்டரும்

 1957இல் பெரியார் வெற்றிவேலர் கோயிற்பணிகள் அனைத்திற்கும் தம்மை முற்றுமுழுதாக அர்ப்பணித்துக்கொண்டார். கலியுக வரதனாகிய கந்தவேள் கருணைமழை பொழிந்து கொண்டு இருந்தான். அடியவர்கள் அருளமுதநீரை அள்ளிப்பருகினர். பெரியார் வெற்றிவேலருக்கு அவருடைய ஞாதிகளும் மற்றும் நெருங்கிய உறவினர்களும் உறுதுணைபுரிந்து வந்தனர். அவர்களுள் வே.மாப்பணசிங்கம், ஆறு.குமாரசாமி, கு.நமசிவாயம், மு.விஸ்ணுராசா, வீ.கோபாலசண்முகம்பிள்ளை, த.பண்டரிநாதன், த.சரவணபவன், மு.குகனந்தன், கு.கணநாதன், த.செல்வக்குமரன் முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

 மாப்பணசிங்கரும் மகத்தான சேவைகளும்

 மாப்பணசிங்கர் சைவப்பெரியார் சினட்டியரின் மகன் வேலுப்பிள்ளையின் புதல்வர்களுள் ஒருவர். புகைவண்டித் திணைக்களத்தில் உயர் அலுவலகராகப் பணிபுரிந்தவர் முருகனுக்கு வழிவழித் தொண்டனாக வாழ்ந்தவர் ஓய்வூதியம் பெரும் முன்னே  சின்னக்கதிர்காமம் திருப்பணிகளில் ஆர்வமுற்றிருந்தார். முருகனின் திருவிளக்குப் பிரபை விசிக்கொண்டிருந்தால் தம் வாழ்வும் ஒளி பெற்று ஓங்கும் என்ற கொள்கையுடையவர். ஞாதிகளை ஒன்றிணைத்து முருகப் பெருமானின் பூசை வழிபாடுகள் ஒழுங்ககான முறையில் நடைபெற மாதந்தம் கொழும்பிலிருந்து ஓரளவு நிதியினை அனுப்பி வந்தவர். இவருக்கு உதவிபுரிந்து வந்த கு.நமசிவாயம், வீ.கோபாலசண்முகம்பிள்ளை ஆகியோர் மறக்கமுடியாதவர்கள். இங்கு பொன்.சிதம்பரநாதன் அவர்களும், நா.சிவசம்பு அவர்களும் நினைவு கூறப்பட வேண்டியவர்கள். நீண்ட காலமாகச் சூரசங்காரத்தின் போது தாளலயத்தோடு கும்பச்சூரனை ஆட்டுவது சின்னக்கதிர்காமத்தில் வழக்கமாக இருந்தது.  இது மாப்பணசிங்கருக்கு மனவேதனை தந்தது. எனவே அரிது முயன்று சூரன் படிமமொன்றைச் செய்வித்து உதவினார். மேலும் சின்னக்கதிர்காம நுழைவாயில் முகப்பில் அமைந்திருக்கும் கட்டடம் அவர் பெயரை நினைவூட்டிக் கொண்டிருக்கிறது.

 நல்வேல்நாதனின்  நற்பணிகள்

Untitled-5 copy 2

சின்னக்கதிர்காமம் சீரெலாம் பெற்று வளர்ந்துவரும் வேளையில் 1973 ம்ஆண்டு வைகாசி மாதம் 16ஆந் திகதி எங்கள் நல்வேலருக்குக் கோயில் உரிமை தந்தையாரால் உறுதி சாசனம் செய்து தரப்பட்டது. இக் காலத்திலிருந்து இவர் பணி தொடர்ந்து வந்தது. பெரியோர்கள் வழிபாட்டினை நித்தியம், நைமித்தியம் என்று பகுப்பர். முறையே இவற்றை நாள் வழிபாடு, சிறப்பு வழிபாடு என்று கூறலாம்.

சைவ சாத்திரங்கள் நித்தியபூசையை நாளாந்த பஞ்சகிருத்தியம் என்று குறிப்பிடும். நைமித்தியபூசையை மகாபஞ்சகிருத்தியம் என்று குறிப்பிடும் மகாபஞ்சகிருத்தியத்தின் போது பாலிகை இடுதல் – படைத்தலாம், வாகனாதி உற்சவங்கள் – காத்தலாம், தேர்த்திருவிழா – அழித்தலாம், சூர்ணோற்சவம் – மறைத்தலாம், தீர்த்தோற்சவம் – அருளலாம். இவற்றை நன்கு உணர்ந்த நல்வேலர் புதிதாக  ஒரு தேரை அமைப்பித்து மகோற்சவத்தின் போது வீதிவலம் வருவித்தார். மேலும் கந்தையா

உபாத்தியாயருக்குக் கனவில் அறுமுகருக்கு அழகிய இரதத்தை அசைத்தால் ஆறுதல் கிட்டும் என்ற செய்தி கிடைத்ததாகவும் கூறுவார். விழாக் காலங்களில் கோயில் தேவைகளையும் மற்றும் ஒழுங்கு கட்டுப்பாடுகளை கவனிப்பதற்கு, தொண்டர்சபை ஒன்றை அமைத்துள்ளார். தைப்பூசம், புத்தாண்டு, மகோற்சவம், நவராத்திரி, கந்தசஷ்டி, திருவெம்பாவை முதலியவற்றைச் சிறப்புற நடத்தி வந்தார். விழாக்காலங்களில் கற்றுணர்ந்த பெரியோர்களைக் கொண்டு சமயப் பேருரைகளையும் ஆற்றுவித்துவந்தார். மேலும் இவருக்கு அரசபணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களான பொன்.முத்துலிங்கசுவாமியும், ஆறு.குமாரசாமியும் பெரிதும் உதவி புரிந்து வந்தனர்.

 

சின்னக்கதிர்காமமும் கந்தபுராணமும்

 

இந்திர ராகிப் பார்மே லின்பமுற் றினிது மேவிச்

சிந்தையி னினைந்த முற்றிச் சிவகதி யதனிற் சேர்வர்

அந்தமி லவுணர் தங்க ளடல்கெட முனிந்த  செவ்வேற்

கந்தவேள் புராணந் தன்னைக் காதலித் தோது வோரே

(கந்தபுராணம்)

 

சின்னக் கதிர்காமத்தில் 1928ஆம் ஆண்டு முதல் கந்தபுராணபடனம் சிறப்புற நடைபெற்று வருகின்றது.

முன்னை நாளில் வட்டுவடக்கு பிளவத்தையைச் சேர்ந்த தமிழறிஞரும் வைத்தியம், சோதிடம் முதலிய பல்கலைகளிலும் வல்லவராய கனகசபை என்னும் இயற்பெயரை கொண்ட இராசாப்பரிகாரியாரும், கந்தையா உபாத்தியாயரும்  பயன் சொல்லி வந்தனர். மட்டுவில் பரமுவும் வட்டுக்கோட்டை அண்ணாவியார் முத்துக்குமாருவும் உதவினர். காலம் சென்று கொண்டிருந்தது. ஆசிரியர் நாகநாதர் முருகுப்பிள்ளை உடனுதவினர், தொடர்ந்து சரவணமுத்து வேலுப்பிள்ளை ஆசிரியர் மு.சு.வீரசிங்கம் ஆசிரியர் முதலியோரும் புராணபடனத்தில் பங்குகொண்டு உழைத்தனர் .

இக்காலப்பகுதியில் ஐயம்பிள்ளை சதாசிவம் அவர்கள் பணியும் புலவர்மணி பண்டிதர். கலாபூசணம் க.மயில்வாகனனாரின் பணியும் மறக்க முடியாதவை. குழந்தைவேல் நமசிவாயம், முத்தையா விஸ்ணுராசா, ஆறுமுகம் குமாரசாமி, தம்பிமுத்து நல்லையா, வேலுப்பிள்ளை முத்துத்தம்பி ,கலாபூசணம் அ.முருகவேள் – முன்னால் அதிபர்-வைத்தியகலாநிதி நாகரத்தினம் கணேசலிங்கநாதன் முதலிய யாவரும் பாராட்டுக்குரியவர்கள்.

 சின்னக் கதிர்காம புராணபடன சபையின் தோற்றம்

காலவெள்ளத்தில் புராணபடனமரபு சிதைந்துவிடாமற் பதுகாத்தற் பொருட்டும் இளைஞர்களை புராணபடனத்துறையில் பங்குகொள்ளச் செய்யும் பொருட்டும் சபை ஒன்று அமைக்கபட்டது. அப் புராணபடனசபையின் தலைவராக கலாபூசணம் க.மயில்வாகனனார், செயலளராக திரு.நா.புவனசுந்தரமும், பொருளாளராக அ.முருகவேளும் ஆட்சி மன்ற உறுப்பினராக ஆயுள்வேத வைத்தியகலாநிதி ந.கணேசலிங்கநாதன் மற்றும் ஆசிரியை ந.கணேசலிங்கநாதன், கு.நமசிவாயம், அரசபணி உயர் அலுவலகர் ஆறு.குமாரசாமி, கதிர்.சரவணபவன் திரு.தி.யோகேஸ்வரன் திரு.க.யோகநாதன் முதலியோரும் இடம்பெற்றனர்.

இவ் அமைப்பின் யாவரும் கந்தபுராணப் பயிற்சி பெற்றனர். மேற்படி சபையின் செயற்பாடுகளின் பொருட்டு குறிப்பிடத்தக்க ஒரு தொகை நிதி திரட்டப்பட்டது. இச் சபையினர் கந்தசஷ்டி உற்சவத்தின் 5ஆம் நாள் விழாவை நடத்தி வந்தனர்.

 சின்னக்கதிர்காமம் மீள்கட்டுமாணமும் குடமுழுக்கும்

 

எதிர்பாராத வகையில் பாரிய இடப்பெயர்வு ஏற்பட்டது. அறங்காவலர் வெ.நல்வேல்நாதன் உடற்குறைவு காரணமாக தென்னிந்திய நாட்டில் சிகிச்சைபெற்று வந்தார். அக் காலப்பகுதியில் அவர் மகள் தேவமனொகரியும் அவர் கணவர் குகபரனும் ஊரை அடைந்து கோயில் அலுவல்களில் ஈடுபட்டனர். திரு.த.சச்சிதானந்தன், திரு.வி.சங்கரசிவம் மற்றும் திரு.மு.சதானந்தன், செல்வி.நா.சிவசம்பு முதலியவர்கள் உதவியாய் இருந்தனர். 2001ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் அறங்காவலர் ஊர் திரும்பினார். ஆலயம் முற்று முழுதாகச் சேதமடைந்திருப்பதை கண்டு கலங்கினார். புனரமைப்பு வேலைகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று எண்ணி ஊரிலுள்ள பெரியோர்களுடன் கலந்து ஆலோசித்து வெளியூர், உள்ளூர் அன்பர்களுடன் தொடர்பு வைத்துப் பணந்த்திரட்டி ஆலயக் கட்டடத் திருப்பணிகளைத் துணிவுடன் மேற்கொண்டார்.

2001 தைப்பூசநாளில் புதிய ஆலயம் அமைப்பதற்க்கான கால்கோள் அத்திவாரமிடப்பட்டது இத் திருப்பணி துரிதமாகவும் செம்மையாகவும் நடைபெற வட்டுக்கோட்டை சின்னக்கதிர்காமம் தேவஸ்தான திருப்பணிச்சபையை அறங்காவலர் வெ.நல்வேல்நாதன் அமைத்து அதன் உதவிகொண்டு கருமங்களை பூர்த்தி செய்தார்.

உறவினர்கள், பொதுமக்கள், அடியார்கள் துணையுடனும் அவர்களிடமிருந்து பெறப்பட்ட நிதியுதவி கொண்டும் யாழ்.மாவட்டத்தில் சிறந்து விளங்கும் சைவக் குருமார்களின் அறிவுரைக்கு அமைய நந்தி (மயில்), பலிபிடம், கொடிமரம் (தம்பம்) ஆகியனவும் ஸ்தாபிக்கப்பட்டு புதுப் பொலிவுடன் விளங்கும் ஆலயம் சுபானு வருடம் ஆனித்திங்கள் 3ம்  நாள் (18.06.2003) திருவோண நன்நாளில் பிரதிஷ்டா பிரதமகுரு, ஆகம கிரியாயோதி, சிவஸ்ரீ சுப்பிரமணிசுந்தராஜக் குருக்கள் அவர்களால் மகா கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது.

 குடமுழுக்கின் பின் சின்னக்கதிர்காமம் தேவஸ்தானம் புராணபடனசபை

 குடமுழுக்கைக் தொடர்ந்து புராணபடனசபையை புனரமைக்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளானார் அறங்காவலர் வெ.நல்வேல்நாதன். புராணபடன சபைத் தலைவர் பண்டிதர்.கலாபூசணம்.க.மயில்வாகனனாரும், பொருளாளர் கலாபூசணம்.அ.முருகவேள் அவர்களும், மூப்பினால் தளர்வுற்றமையே காரணம். திருவாளர்கள் சி.வெற்றிவேலு, வா.பேரின்பசிவம், சீ.பலசுப்ரமணியசிவம் என்போர் முறையே தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு தெரிவாகி 2004ம் ஆண்டு புனரமைக்கப்பட்ட புராணபடனசபை உருவாகியது. திரு. சீ.பலசுப்ரமணியசிவத்தின் திடீர் பதவிவிலகலைத் தொடர்ந்து திரு.த.திருமுத்துராசா பொருளாளராக தெரிவானார். புனரமைக்கப்பட்ட புராணபடனசபை செயற்படத்தொடங்கியதும் முன்னைய புராணபடனசபை பொருளாளர் அமரர்.முருகவேள் வசமிருந்த புராணபடனசபை நிதியான ரூபா பத்தாயிரம் அறங்காவலர் நல்வேல்நாதனிடம் ஒப்படைக்கப்பட்டு அப்பணம் பின்னர் புனரமைக்கப்பட்ட புராணபடனசபையின் வங்கிக் கணக்கில் வைப்பு செய்யப்பட்டது.

புனரமைக்கப்பட்ட புராணசபையின் செயற்பாட்டை நன்கு கவனித்த கிராமத்துப் பெரியோர்சிலர் இச்சபையில் அங்கத்தவராக இணைந்து மிகுந்த சிரத்தையுடன் பயிற்சிகளில் கலந்தும் புராணபடனத்தில் பங்குகொண்டும் தங்களாற்றலை வெளிக்காட்டி வருகின்றனர். கந்தபுராணப்பாடலை  ஒருவர் வாசிக்க மற்றவர் பாடலின் பதவுரையை வாசிக்கும் இக்காலத்தில் பயன்விரித்துப் பொருள்சொல்லக் கூடியோரை சபை கொண்டிருப்பது சின்னக்கதிர்காமக் கந்தனின் திருவருள் என்றுதான் சொல்லவேண்டும். புராணபடனசபை தற்போது  சீ.வெற்றிவேலு மற்றும் வே.சிவயநமதேவி ஆகியோரின் முறையே தலைவர், செயலாளராக கொண்டு சிறப்பாகக் இயங்கிவருகின்றது.

 அன்னதான சபை

அறங்காவலர் வெ.நல்வேல்நாதன் ஒப்புதலுடன் உருவாக்கப்பட்ட அன்னதானசபையும் துரிதமாக வளர்ச்சி அடைந்து வருகின்றது. ரூபா இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட தொகையை சேமிப்பில் வைத்துள்ளது. அன்னதான சபையின் நிதிசேகரிப்பிற்குச் சிலர் எதிராகச் செயற்பட்டாலும் சபையைச் சேர்ந்த இளைஞர்கள் ஊக்கத்துடன் நிதிசேகரித்து விழாக்காலங்களில் அன்னதானப் பணியை சிறப்பாகச் செய்துவருகின்றனர்.

 நல்வேல்நாதன் ஞாபகார்த்த மண்டபம்

 ஆலயத்தில் நடைபெறும் அன்னதான நிகழ்வுகள் போன்றவற்றை செவ்வனே நிறைவேற்ற ஒரு மண்டபம் ஆலயத்தை அண்டிய எல்லைக்குள் இயலுமான விஸ்தீரணத்தில் அமைக்க வேண்டுமென்ற பேரவா ஆலய முன்னால் அறங்காவலர் குகத்திரு.வெ.நல்வேல்நாதன் அவர்களுக்கு இருந்து வந்தது. அவருக்குப் பின் ஆலய நிர்வாகத்தைப் பொறுப்பேற்ற அவரது மூத்தமகன் முருகதாசன் அவர்கள் ஆலய வளவின் மேற்குப் பகுதியிலிருந்த இடத்திலேயே அப்பணியை நிறைவேற்றி நல்வேல்நாதன் ஞாபகார்த்த மண்டபமென நாமம் சூட்டி தந்தையாரின் முதலாவது ஆண்டு நினைவுதினம் அமைந்த விகிர்தி வருட வைகாசி திருவாதிரை நன்நாளில் (17.05.2010) முறைப்படி திறப்பு விழாவும், அன்னதான நிகழ்வும் நடாத்தி வைத்தார்.

சித்திரத் தேர்

ஆலயத்தில் தேர்த்திருவிழாவை நடாத்த ஆரம்பித்த காலம் முதலேயே சித்திரத்தேர் ஒன்று அமைக்கப்பட்டவேண்டுமென்ற நினைப்பிலிருந்தார் முன்னால் அறங்காவலர் வெ.நல்வேல்நாதன் அவர்கள். ஆலயத்தை மிள்நிர்மாணம் செய்து குடமுழுக்கு செய்ததன் பின் முதலாவது மகோற்சவத் தேர்த்திருவிழாவின் போது சித்திரத் தேர் அமையாதது அவருக்கு பெரும் மனக்குறையாக இருந்தது. அதனை நிவர்த்தி செய்யும் பணியிலிறங்கிய அவரது மூத்த புதல்வரும் தற்போதைய அறங்காவலருமாகிய ந.முருகதாசன் அவர்கள் விகிர்தி வருட வைகாசி திருவாதிரை நன்நாளில் (14.06.2010) அங்குரார்ப்பண கால்கோள் நிகழ்வை நடாத்தி தேர்த்திருப்பணிகளை ஆரம்பித்து வைத்தார். அதற்கென திட்டமிட்ட கால எல்லைக்குள் இத்திருப்பணியைத் தொண்டர்சபையினரின் அனுசரணையுடன் நிறைவு செய்ததனாலேயே இத்தேர் வெள்ளோட்டத்தைக் கரவருடம் சித்திரை 31ம் நாள் (14.05.2011) சின்னக்கதிர்காம ஆறுமுகப்பெருமாள் வள்ளி தேவசேனா சமேதராகச் சித்திரத்தேரில் ஆரோகணித்து அடியார்களுக்கு நல்அருள் பாலிக்கும் தேர்த்திருவிழாக் காட்சியையும் காணமுடிகிறது.

 தொண்டர் சபை

கட்டுத்தேரில் எழுந்தருளி சில ஆண்டுகள் அருள் பாலித்த சின்னக்கதிர்காம முருகன் தற்போது சித்திரத்தேரில் ஆரோகணித்து விதியுலா வருவதில் சின்னக்கதிர்காமத் தொண்டர் சபைக்கும் முக்கிய பங்குண்டு. விழாக்காலங்களில் கோவில் தேவைகளையும் மற்றும் ஒழுங்கு கட்டுப்பாடுகளையும் கவனிப்பதற்கு முன்னைய அறங்காவலர் அமரர் நல்வேல்நாதன் அவர்களால் அமைக்கப்பட்ட இத் தொண்டர் சபையானது ஆலய மேற்கு வீதியில் அழகான அன்னதான மடத்தை அமைப்பதற்கு புதிய அறங்காவலர் குகத்திரு.ந.முருகதாசிற்குப் பலவழிகளிலும் உதவியாக இருந்துள்ளது புதிய அறங்காவலர் அவர் தந்தை வழிநின்று ஆலயத்தை சிறந்த முறையில் பரிபாலித்து வருகிறார்

 

 

முற்றும்.